குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ஏன்?

ஆசிரியர் முருகன் 


குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ஏன்?


மதச்சார்பற்ற, பன்முக ஒருமைப்பாடு கொண்ட ஜனநாயக, சுதந்திர இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியிருப்பது, பாஜக அரசின் மதவாத ஆட்சியைத் தோலுரித்துக் காட்டுகிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில் மத நம்பிக்கையின் அடிப்படையில், ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதித்த தீர்ப்பைச் சிறுபான்மை மக்கள் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு அமைதி காத்தார்கள். ஆனால் அதையே தொடர்ச்சியாக, சிறுபான்மை இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் விதமாகப் பாஜக அரசு குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி இருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்துக் கொண்டே வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சியிலும், உழவர் சந்தையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு இயக்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமா னோர் ஆண்களும், பெண்களும் என திரண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக கண்டனக் கோஷமிட்டனர். பல மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கும், தமிழ் மொழி பேசும் தமிழர்களுக்கும் குடியுரிமை இல்லை என்று குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை தமிழக எடப்பாடி பழனிசாமி அரசு ஆதரவு அளித்திருப்பது வெட்கக்கேடாக இருக்கிறது. இது அடிமைத்தனத்தையே காட்டுகிறது. இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவானது, மக்களின் கவனத்தை நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பும், வழக்கமான பாஜகவின் செயல்பாடுகளில் ஒன்று. ஏதோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கு புகலிடம் தேடி வருவதைப் போலவும், அந்த நாடுகளில் இந்துக்களுக்குக் கொடுமைகள் நிறைய நடப்பதைப் போலவும், பிஜேபி கும்பல் இங்கே தவறான பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து, பிரிவினை ஏற்பட்ட பின் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பிய முஸ்லிம்கள் அங்கே சென்று விட்டார்கள். அதே போல அங்கிருந்த இந்துக்கள், இந்திய பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். அப்படிப் போக விரும்பாத மக்கள் அப்படியே அந்தந்த நாடுகளில் வசிக்கிறார்கள். அந்தக் கால கட்டங்களில் குடிபெயர்ந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அப்போதே வழங்கப்பட்டு விட்டது. பிஜேபி தலைவர் அத்வானி, மன்மோகன் சிங் போன்றவர்கள் எல்லாம் அப்படி இடம் பெயர்ந்தவர்கள் தான். குடியுரிமை இல்லாமலா இங்கே அரசாங்கப் பதவிகளைப் பெற்றார்கள்? இப்போதும், அவ்வப்போது, ஒரு சில இந்துக்கள் அந்த நாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களுக்காகப் புகலிடம் தேடி இந்தியாவுக்கு வருவதுண்டு. அப்படி வருகிறவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. பத்தாண்டுகளுக்குச் சில நூறு என்பதே அதிகம். அவர்களுக்கும் ஏற்கனவே சட்டத்தில் உள்ளது போல 12 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்ச்சியாக நடைபெற்று வருவது தான். அதேபோல, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற பிரச்சாரத்திலும் முழு உண்மை கிடையாது. இங்குள்ள மதவெறியர்கள் போலவே, அங்கேயும் இருக்கிறார்கள். அவ்வளவு தான். ஆனால் அந்நாட்டு அரசாங்கங்கள், அந்நாட்டு சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கிய பிரிவினர்) ஆதரவாகத் தான் செயல்படுகிறார்கள். சமீபத்தில் கூட பாகிஸ்தான் அரசு பல இந்து கோயில்களைப் புனரமைக்க உதவி செய்தது. சீக்கியர்களின் புனித தலத்தை இந்திய சீக்கியர்களின் வழிபாட்டிற்குத் திறந்து விட்டுள்ளது. பங்களாதேஷ் நாட்டின் பொருளாதாரம், இந்திய பொருளாதாரத்தை விட விரைவாக, வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே அங்கிருந்து இந்தியாவுக்குக் கள்ளத்தனமாகக் குடியேறுகிறார்கள் என்பதிலும் உண்மையில்லை. இருக்கும் அகதிகள், 1971 பங்களாதேஷ் சுதந்திரப் போரின் போது வந்தவர்கள். அதில் பெங்காலி இந்துக்களும் இருக்கிறார்கள். பெங்காலி முஸ்லிம்களும் இருக்கிறார்கள். எனவே, இந்தியா தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளான வீழ்ந்து போன பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை, அதிகரிக்கும் வறுமை, வெகுவாகக் குறைந்து போன செலவழிக்கும் திறன், பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் குற்றங்கள், வெங்காயம் போன்ற பொருட்களின் விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் சுற்றுச் சூழல் பாதிப்புகள். இப்படி நீண்ட பட்டியலில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அவ்வப்போது ஏதாவது ஒரு மத நாட்டுப்பற்று விஷயங்களை பிஜேபி கும்பல் கையிலெடுக்கும். அது போன்ற ஒன்று தான் இந்திய குடியுரிமைச்சட்டத் திருத்த மசோதா.


' முஸ்லிம் லீக் ஜின்னா தனி நாடு கோருவதற்கு முன்பே , 1935-ல் மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என சொன்னவர்கள் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். முன்னோடி, சாவர்க்கர் - ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற இந்துத்வா அமைப்புகளின் தலைவர்கள் தான். அதன் பின்பு தான் ஜின்னா, பாகிஸ்தான் தனி நாட்டை கோரினார். ஆனால் காங்கிரஸ் கட்சி இப்படி பிரிப்பதை எதிர்த்தது. இது தான் உண்மையான வரலாறு.