சிறப்பு நிருபர் MD மொய்தீன்
நல்லாட்சித் தரவரிசையில் தமிழகத்திற்கு முதலிடமா?
ஊராட்சி தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறை ஆய்வகம், நல்லாட்சித் தர வரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனத்தையும், அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்: மோசமான ஆட்சியைத் தூக்கி நிறுத்த மத்திய பாஜக அரசு முனைந்திருக்கிறது.
- இந்தத் தர வரிசைப் பட்டியலுக்கு மத்திய அரசில் யார் ஒப்புதல் கொடுத்தது? பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையா?
- துறைகளின் கீழ் உள்ள அளவுகோல் குறித்த விபரங்களை அளித்தது யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத ஒரு மர்ம ஆய்வறிக்கை அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
- 3 ஆண்டுகால எடப்பாடி பழனிச்சாமியின் கேடுகெட்ட, மக்கள் விரோத, ஊழல் அரசுக்கு நல்லாட்சி சாயம் பூசி, கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறதோ மத்திய பாஜக அரசு என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக நடுநிலையாளர்களுக்கு எழுகிறது.
- ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 9 துறைகளில் இரு துறைகளில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக உள்ள தர வரிசைப் பட்டியலில் எப்படி தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது? எந்தவித விளக்கமோ, விவரமோ இல்லை.
- அதிமுக அரசுக்கு அளித்துள்ள இந்த சான்றிதழால், மத்திய பாஜக அரசு தமிழகத்தின் கேடு கெட்ட அதிமுக ஆட்சிக்கு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியிருக்கிறது.
- பொள்ளாச்சியில் 250 பெண்களுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை, ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொத்து கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்ட கொடுமை.
- பெண்களின் பாதுகாப்பு மட்டுமல்ல, பெண் குழந்தைகள் பாலின வன்கொடுமையில் தமிழகம் 2-வது இடம்.
- சட்டம், ஒழுங்கு சீரழிவில் அவதிப்படும் மக்களுக்கு அதிமுக நல்லாட்சி வழங்கியுள்ளது என்று எப்படி மத்திய அரசு கண்டுபிடித்தது?
- பொதுப் பாதுகாப்பு ஆய்வு வரம்பிற்குள், குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்த எந்த அளவுகோலும் இல்லை . பிறகு எப்படி இந்த முடிவு அறிவிக்கப்பட்டது?
- சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகளை அளிப்பதில் முக்கிய பங்காற்றும் உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத போது, எப்படி இந்தத் துறையில் தமிழகம் முதலிடத்திற்கு வந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது?
- தொழில் துறையில் 14-வது இடம், விவசாயத் துறையில் 9-வது இடம், சமூக நலத் துறையில் 7-வது இடம் என்றெல்லாம் உண்மையான செய்திகளைப் போட ஏன் துணிச்சல் இல்லை?
- பத்திரிகைகளுக்கு என்ன அச்சுறுத்தல்? எங்கிருந்து அழுத்தம்?
- பாரபட்சமற்ற ஆய்வு நடத்தப்பட்டால், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷனில் முதலிடம் பிடிக்கும்.
- சட்டம், ஒழுங்கு சீரழிவில் முதல் இடத்தைப் பிடிக்கும், தொழில் வளர்ச்சியில் கடைசி இடத்திற்குத் தள்ளப்படும்.
- வேலையில்லாத திண்டாட்டத்தில் முதலிடத்திற்கு வரும்.
- நல்லாட்சியில் பூஜ்ஜியத்திற்கும் கீழே ஏதாவது ஒரு வரையறை செய்ய முடியுமென்றால் அந்த இடத்திற்குச் சென்று விடும்.
- ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை, பலரும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் ஊழல் வழக்கு விசாரணைகளிலும், சிபிஐ விசாரணை யிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
- பதவியில் இருக்கும் முதலமைச்சரின் ஊழல் மீது சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு ரெய்டுகள் அமைச்சர்கள் மீதும், ஏன் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளரின் அலுவலகத்திலும் நடந்து விட்டது.
- நல்லாட்சி என்று தரம் கெட்ட ஆட்சிக்கு ஒரு தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு, அதில் முதலிடம் என்று எடப்பாடியின் ஊழல் ஆட்சிக்குத் தர நிர்ணயம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசால் எப்படி முடிந்தது?
- பாஜக அரசுக்கும், இங்குள்ள அதிமுக அரசுக்கும் மத்திய , மாநில அரசுகளுக்கிடையேயான உறவு என்பதையும் தாண்டி ஏன், கூட்டணி உறவுக்கும் அப்பாற்பட்ட நெருக்கமான ஒரு உறவாக, அதிமுக - பாஜக உறவு அமைந்திருக்கிறது என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
- தமிழகம் எப்படியோ சீரழியட்டும், அந்த மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்ற வஞ்சக நோக்கில் அதிமுக அரசுக்கு நல்லாட்சி சான்றிதழை மத்திய பாஜக அரசு செயற்கையாக அளித்திருக்கிறது. இதைத் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.
- தர வரிசைப் பின்னணியைப் பற்றித் தமிழக மக்களுக்கு எழுந்துள்ள அய்யப்பாடுகளைப் போக்கிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், தரங்கெட்ட ஆட்சிக்குத் தரத்தில் முதலிடமா? என்ற தலைப்பில் நெட்டிசன்கள் விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சாரநாத் பேசுகையில், உளவியல் ரீதியாகத் தமிழகத்தில் எதையாவது செய்வதற்காகத் தான் நல்லாட்சிச் சான்று வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் 9-வது இடம், 3 ஆண்டு காலம் உள்ளாட்சித் தேர்தலே நடத்த முடியலே. நீதி, நிர்வாகம் என்ற வகையில் தன்னிலை கொண்ட அரசாக இல்லை . நீதிமன்றங்களை அணுகி, உச்சநீதி மன்றத்தின் அழுத்தத்தினால் தான் உள்ளாட்சித் தேர்தலுக்கே அறிவிப்புகள் வந்தன. எதையோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அதன் பிரதி பலனாகத் தான் இந்த நல்லாட்சி சான்று. நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து தமிழக அரசு கவனிக்கவே இல்லை. உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் வந்து, தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு புறக்கணித்தது என்று சொன்ன பிறகு தான், தமிழக அரசுக்குத் தெரிந்தது. இப்படிப்பட்ட அரசுக்குத் தான் நல்லாட்சி தரவரிசை கொடுத்திருக்கிறார்கள் என்று கூறினார். மேலும், வழக்கறிஞர் சாந்தி பேசுகையில், பெண்களுக்கான பல சட்டங்கள் இருக்கு. ஆனால் சட்டங்கள் எல்லாம் மெத்தனமாக இருக்கு. பொள்ளாச்சி வழக்கு, நிர்பயா வழக்கு அனைத்திலும் சட்டங்கள் மெத்தனமாக இருந்து கொண்டு இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றால், போலீசே இல்லை . எஃப்.ஐ.ஆர். காப்பியே கொடுக்கறதில்லே. பெண் அதிகாரிக்கே உயர் அதிகாரியால் பாலியல் தொல்லை. அதற்கே நடவடிக்கை இல்லை. எப்படி நல்லாட்சி என்று கூற முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.