தலைமை நிருபர் ஜனனி
திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி எல்.கே.ஜி மாணவர் உள்பட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள ஆருத்ராபட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன் தரணிதரன் (9). இவர் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜெயப்பிரகாஷ் மகன் விக்னேஸ்வரன் (7). இவர் 2ஆம் வகுப்பு படித்து வந்தான். வீரமணி மகன் வீரன் (4), எல்.கே.ஜி படித்து வந்தான்.நேற்று பெற்றோர்கள் வேலைக்கு புறப்பட்ட சென்ற நிலையில், வீட்டில் இருந்த 3 சிறுவர்களும் அந்த பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, ஏரியில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில், வீட்டிற்கு வந்த பெற்றோர், சிறுவர்களை காணாததால் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது, சிறுவர்களின் உடல் ஏரியில் மிதப்பத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், வெறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் பலியான சம்பவம் ஆருத்ராபட்டு பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.