ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை நிருபர் ஜனனி

ஈரோடு ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் மாநில உதவி தலைவர் ராஜூ, மாவட்ட குழு உறுப்பினர் அம்மணி அம்மாள், மாவட்ட உதவித் தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகளை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கவும், ரயில் நிலைய பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்கவும் எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


மேலும், புதுச்சேரி, சண்டிகார் யூனியன் பிரேதேசங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியம் வழங்குவது போல், தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும் எனவும், ஈரோடு மாவட்டத்தில் தாலுகா, ஒன்றிய அளவில் முகாம் நடத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக ஈரோடு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.