தலைமை நிருபர் ஜனனி
சிவகாசியில் வேன் ஓட்டுநர் வெட்டிக்கொலை – தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை!
சிவகாசியில் சாலையில் நடந்து சென்ற வேன் வேட்டுநர், மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த ராஜ்கோனார் மகன் ஆனந்தராஜ் (32). இவர் கார்த்திக் என்பவரிடம் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். சிவகாசி – விஸ்வநத்தம் சாலையில் உள்ள மணிநகர் வாகன நிறுத்தத்தில், வேனை நிறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வாகன நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தார்.மணிநகர் அருகே சென்றபோது, ஆனந்தராஜை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சிவகாசி டிஎஸ்பி பாபு பிரசாந்த் மற்றும் சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் நடந்துசென்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.