சேலம் அருகே விபத்தில் சிக்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சென்ற கார் விபத்திற்குள்ளாதில், ஆட்சியர் அதிர்ஷ்ட வசமாக காயங்களின்றி உயிர் தப்பினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, நேற்று சேலத்தில் நடந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, நேற்று இரவு 10 மணி அளவில் திருச்சிக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். காரை சீனிவாசன் என்பவர் ஓட்டிச் சென்றனார். ஆட்சியருடன் அவரது உதவியாளர் பெரியண்ணன்சாமி என்பவரும் உடன் சென்றிருந்தார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, தாசநாயக்கன்பட்டி என்ற இடத்தின் அருகே நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி மழையினால் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்போது, அந்த வழியாக வந்த ஆட்சியரின் கார் எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளான லாரி மீது அதிவேகமாக மோதியது.இதில், காரின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. எனினும் காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஆட்சியர் சிவராசு அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பினார். கார் ஓட்டுனர் சீனிவாசன், உதவியாளர் பெரியண்ணன் சாமி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மற்றொரு கார் மூலம் ஆட்சியரை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் கார் விபத்தில் சிக்கிய நிகழ்ச்சி திருச்சி மாவட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.